தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுவது ஏன்? இதில் வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
கேள்வி : சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுவது ஏன்?
பதில்: தகுதியான வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் இருப்பதை உறுதிசெய்வது, இருப்பிடத்தைவிட்டு வெளியேறியவர்களை பட்டியலில் இருந்து நீக்குவது.
கேள்வி: தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி எப்போது நடைபெறுகிறது?
பதில்: இன்று முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும்.
கேள்வி: எஸ்.ஐ.ஆர்., நடைமுறைகள் என்ன?
பதில் : வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட இரு படிவங்களை வாக்காளர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு தோறும் வழங்குவார்கள்.
கேள்வி : அச்சிடப்பட்ட வாக்காளர் படிவங்களை வாக்காளர் என்ன செய்ய வேண்டும்?
பதில் : வாக்குச்சாவடி அலுவலர் தரும் படிவங்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை பூர்த்தி செய்து தர வேண்டும்.
கேள்வி : வாக்காளர் ஆவணங்கள் எதையாவது தர வேண்டுமா?
பதில் : வாக்காளர் எந்த ஆவணங்களையும் தர வேண்டாம். வாக்காளர் விரும்பினால் சமீபத்திய புகைப்படத்தை தரலாம்
கேள்வி : பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவங்களை என்ன செய்ய வேண்டும்?
பதில் : வாக்குச்சாவடி அலுவலர் தரும் படிவங்களில் ஒன்றை, பூர்த்திசெய்து அவரிடமே திருப்பித் தர வேண்டும். அதற்கான ஒப்புகையையும் அவர் வழங்குவார். மற்றொன்றை நம்மிடமே தந்துவிடுவார்.
கேள்வி : வாக்குச்சாவடி அலுவலர் எத்தனை முறை வீடுகளுக்கு வருவார்?
பதில் : வாக்குச் சாவடி அலுவலர் ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருவார்.
கேள்வி : ஆன்லைன் மூலம் வாக்காளர் விவர படிவங்களை நிரப்பலாமா?
பதில் : voters.eci.gov.in என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து பதிவேற்றலாம்.
கேள்வி : வாக்காளர் முகவரி மாறியிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
பதில் : அதே பாகத்தில் மாறி இருந்தால், வீட்டுக்கு வரும் அதிகாரியிடம் தெரிவிக்கலாம். தொகுதி மாறி இருந்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
கேள்வி : வாக்காளர் தொகுதி மாறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
பதில் : வாக்காளர் தொகுதி மாறி இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாது. டிச.9-ஆம் தேதிக்குப் பிறகு, உரிய ஆவணங்களுடன் மனு அளிக்க வேண்டும்.
கேள்வி : வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க முடியுமா?
பதில் : புதிதாக பெயரை சேர்க்க முடியாது. அதேநேரத்தில், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம்-6ஐ நிரப்பித் தர வேண்டும். எனினும் அவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. உரிய ஆய்வுக்குப் பின் பட்டியலில் சேர்க்கப்படும்.

