விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் வாங்கி அருந்தியுள்ளனர். தொடர்ந்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய 10-க்கும் மேற்பட்டோரை, அப்பகுதி மக்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்க மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் எக்கியார் குப்பம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மயங்கி கிடந்த மேலும் 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அமரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கள்ளாச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதர குற்றவாளிகளை தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
