நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212 ரன்கள் மற்றும் தென்ஆப்பிரிக்கா 138 ரன்கள் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 2-வது இன்னிங்சில் 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையை சேர்த்து, ஆஸ்திரேலிய அணி 282 ரன்களை தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு, லார்ட்ஸ் மைதானத்தில் எந்த அணியும் 280 ரன்களுக்கு மேலான ஸ்கோரை சேஸ் செய்யவில்லை. சவாலான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் 4-வது இன்னிங்சில் (இலக்கை துரத்தும் இன்னிங்ஸ்) சதத்தை ருசித்த 6-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி, 83.4 ஓவர்களில் இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஆனது. இந்நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி. சாம்பியன் பட்டத்தை தென் ஆப்பிரிக்கா தற்போது வென்றுள்ளது. கடைசியாக 1998ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்றது. அதன்பின்னர், ஐ.சி.சி. கோப்பை எதையும் தென் ஆப்பிரிக்கா வெல்லவில்லை. தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்காவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

