விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மூலப்பொருள் சப்ளை செய்த ரசாயண ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் விற்கப்பட்ட சாராயம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷ சாராயமே உயிரிழப்புக்கு காரணம் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக இருப்பதால் சாராயம் கிடைக்காத சிலர் விஷ சாராயம் விற்றதை கண்டறிந்த போலீசார், மெத்தனால் எந்தெந்த ஆலைகளில் இருந்து வந்தது என்று விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளையநம்பி என்பவருக்கு சொந்தமான சென்னை வானகரத்தில் உள்ள ரசாயண ஆலையில் இருந்து 1,000 லிட்டர் மெத்தனால் விஷச்சாராயம் விற்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் உடனே வானகரம் விரைந்த காஞ்சிபுரம் போலீசார், இளையநம்பி மற்றும் அங்கு பணிபுரிந்த சதீஸ் (27), மணிமாறன் (27), கதிர் (27), உத்தமன் (31), ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் அந்த நிறுவனத்தில் இருந்த சிறிதளவு மெத்தனால் வேதிபொருளை பறிமுதல் செய்து சோதனைக்கு எடுத்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.விஷசாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.