ஜி-20 உச்சி மாநாடு நாளை டெல்லியில் தொடங்கும் நிலையில், உலக தலைவர்கள் இந்தியாவிற்கு நேற்றிரவு முதல் வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி-20 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவுதி, தென்கொரியா, மெக்ஸிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜி-20 தலைமைப் பொறுப்பை கடந்தாண்டு நவம்பரில் இந்தியா ஏற்றுக் கொண்டது. இதன்படி கடந்த ஓராண்டாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 தொடர்பான மாநாடுகள் நடைபெற்றன. இறுதியாக ஜி-20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு தலைநகர் டெல்லியின் பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பாரத் மண்டபம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது.
நாளை ஜி-20 உச்சி மாநாடு தொடங்கும் நிலையில், இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாளை மறுநாள் பிரான்ஸ், கனடா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில், நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இம்மாநாட்டின் மூலம் 15க்கும் மேற்பட்ட நாடுகளின் உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார் என்று வெளியுறவு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் முக்கிய பிரபலங்களுக்கு நாளை இரவு விருந்து வைக்கப்படுகிறது. உலகத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர்கள், இந்திய தொழிலதிபர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நலக்குறைவு காரணமாக அவரால் மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. அதேபோல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் உடல் நலக்குறைவு காரணமாக மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று இன்று காலை தெரிவித்துள்ளார்.
உலக தலைவர்கள் பங்கேற்கும் விருந்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகிய தலைவர்கள் நாளைய விருந்தில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர். சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளனர். ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை விருந்துக்கு அழைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார மங்கலம் பிர்லா, பார்தி-ஏர்டெல் நிறுவனர் தலைவர் சுனில் பார்தி மிட்டல் உள்ளிட்டோர் விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
