எகிப்தில் உள்ள “வேலி ஆஃப் கிங்ஸ்” என்ற பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில், 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டிருப்பது உலக வரலாற்று ஆய்வுலகில் பெரும் வியப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கம் தென்னரசு பதிவிட்டிருக்கிறார்.
பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நிலவிய ஆழமான வணிகத் தொடர்புகளைப் பறைசாற்றும் வகையில், எகிப்தின் புகழ்பெற்ற “வேலி ஆஃப் கிங்ஸ்” எனப்படும்’மன்னர்களின் பள்ளத்தாக்கில்’ இந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு ஆராய்ச்சியார்கள் மற்றும் அகழ்வாய்வாளர்களால் ‘சிகை கொற்றன்’ எனவும் பெயரிடப்பட்டு உள்ளது. இது, பண்டைய தமிழ்நாடு , இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் ரோமானியப் பேரரசுக்குமான வர்த்தகத் தொடர்புகள் குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஒரு திருப்புமுனைக் கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.
பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஷார்லட் ஸ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச் ஆகியோர் 2024–25ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் போது, தேபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் சுமார் 30 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் தமிழ் பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் பார்வையிட்ட இந்த இடத்தில் இந்திய மொழிக் கல்வெட்டுகள் இருப்பது இதுவரை கவனத்திற்கு வராதது ஆய்வுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் மிகவும் கவனம் ஈர்த்த பெயராக ‘சிகை கொற்றன்’ அமைந்துள்ளது. இந்தப் பெயர் ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் மொத்தம் எட்டு முறை செதுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சில கல்வெட்டுகள் நுழைவாயிலிலும், சில உயரமான உட்புறச் சுவர்களிலும் காணப்படுகின்றன. குறிப்பாக ஒரு கல்லறையில் நுழைவாயிலிலிருந்து சுமார் நான்கு மீட்டர் உயரத்தில் ‘சிகை கொற்றன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பது, அக்காலத்தில் பார்வையாளர்கள் தங்கள் இருப்பை பதிவு செய்ய எடுத்த முயற்சியின் சான்றாகக் கருதப்படுகிறது. மேலும் ‘கோபான் வரத கண்டன்’, ‘சாத்தன்’, ‘கீரன்’ போன்ற பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு மலபார் கடற்கரை வழியாகப் பண்டைய தமிழகத்திலிருந்து எகிப்து மற்றும் ரோமானியப் பேரரசு பகுதிகளுக்குச் சென்ற கடல் வணிகப் பாதைகள் எவ்வளவு விரிவடைந்திருந்தன என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தற்போது நைல் நதிப் பள்ளத்தாக்கின் மையப்பகுதியான மன்னர்களின் பள்ளத்தாக்கு வரை தமிழர்களின் தடம் இருப்பது, அவர்கள் வெறும் வணிகர்கள் மட்டுமல்லாது, கலாச்சாரத் தொடர்புகளிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கான புதிய சான்றாகப் பார்க்கப்படுகிறது.
தங்கம் தென்னரசு பதிவு!

