நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான வெள்ள நீர் கால்வாய்; தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நிறைவு

இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விவசாயம்

நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லையில் துவக்கி வைக்கிறார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த தாமிரபரணியை, நம்பியாறு, கருமேனியாற்றை இணைக்கும் வெள்ள நீர் கால்வாய் திட்டத்திற்கு, 2009-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். தாமிரபரணியின் வெள்ள நீரை பயன்படுத்துவதற்காக, 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டி விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி நீர் கொண்டு செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது.
நான்கு கட்டங்களாக திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், 2 கட்ட பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் வேகம் குறைந்தது. இருப்பினும், 2016ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் திட்டத்திற்கான அனுமதி பெற்ற போதும், கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் திட்ட மதிப்பீடு 950 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், திட்டப் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டன.
நெல்லை மாவட்டத்தின் வெள்ளங்குளியில் இருந்து, திடியூர் மூலக்கரைப்பட்டி, விஜய நாராயணம், திசையன்விளை வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், எம்.எல்.தேரி வரை கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று 16 ஆண்டுகளுக்கு பின் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் மூலம் தாமிரபரணி ஆற்றில் இருந்து பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் வழியாக கடலில் கலக்கும் 15 ஆயிரம் கன அடி வரையிலான வெள்ள நீர் சேமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் கால்வாய் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கூடுதலாக 23 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
திட்டத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட குளங்கள் பாசன வசதி பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும் என்பதால் கோடை காலங்களில் கிணற்று பாசனம் மூலம் நல்ல மகசூலை பெற முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தியது போல் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *