பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 28ம் தேதி கோலகலமாக தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த பாராலிம்பிக் விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
கடைசி நாளான இன்று இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார். இதன் அரையிறுதியில் பூஜா தோல்வியை அடைந்தார். முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் பூஜா தகுதி பெறவில்லை. இப்போட்டியுடன் நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியாவின் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் இந்தியா 29 பதக்கங்களுடன் 18வது இடத்தைப் பிடித்துள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற பதங்களின் விவரம்
தங்கம் 7, வெள்ளி 9, வெண்கலம் 13 மொத்தம் 29.
இந்தியா பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் ஒரு தங்க பதக்கமும், ஒரு வெண்கல பதக்கமும், தடகள போட்டியில் 4 தங்க பதக்கங்களும், 6 வெள்ளி பதக்கங்களும், 7 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளது. மேலும், பாட்மின்டன் போட்டியில் ஒரு தங்க பதக்கமும், 2 வெள்ளி பதக்கங்களும், 2 வெண்கலமும் பெற்றுள்ளது. அதேபோல், ஜூடோவில் ஒரு வெண்கலமும், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், ஒரு தங்கமும், ஒரு வெள்ளியும், 2 வெண்கலமும் வென்றுள்ளது.