இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒளிரும் தமிழ்நாடு; மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், சந்திரயான்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 9 விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், 2008ஆம் ஆண்டு நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கிய இந்தியா, 2023ல் நிலவில் கால் பதித்து சாதனை படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி கொடிகட்டி பறப்பதாகவும், சந்திரயான்-3 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தது பெருமையளிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
9 விஞ்ஞானிகளில் 6 பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர் என்பது பெருமைக்குரியது என்றும், இந்த விஞ்ஞானிகளை வழிகாட்டிகளாக தமிழ்நாட்டு இளைஞர்கள் ஏற்று செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார். இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திய 9 விஞ்ஞானிகளுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்