ஒசூரில் உள்ள ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் நகரான ஒசூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் போன் தயாரிப்பு ஆலையை டாடா நிறுவனம் நிறுவியது. இந்த நிலையில் அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் செல்போனுக்கான சில உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாத தற்போது ஐபோன் செல்போன் பாகங்களை ஒருங்கிணைத்து அசம்பிள் (Assemble) செய்யும் பணியும் தொடங்கப்படவுள்ளது.
இந்த விரிவாக்கம் ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் அடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் நாளை தொடங்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரபல காலணி மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் சென்னையில் திறன் மேம்பாட்டு மையத்தை திறக்க முன் வந்துள்ளது.
இதேபோன்று புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்கவுள்ள நிலையில், டாடா நிறுவனமும் தனது தொழிற்சாலையை விரிவுபடுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

