வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சென்னை புத்தகக் காட்சி YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 47-வது சென்னை புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்கு முதலமைச்சர் வர இயலாததால், புத்தகக் காட்சி அரங்குகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துரையை அமைச்சர் உதயநிதி வாசித்தார்.
சிறந்த படைபாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாயுடன் கூடிய, கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். உரைநடை பிரிவில் ஆ.சிவசுப்பிரமணியன், கவிதை பிரிவில் உமா மகேஸ்வரி, நாவல் பிரிவில் தமிழ்மகன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறுகதை பிரிவில் அழகிய பெரியவன், நாடக பிரிவில் வேலு.சரவணன், மொழிபெயர்ப்பு பிரிவில் மயிலை பாலு ஆகியோருக்கும் அமைச்சர் உதயநிதி விருதுகளை வழங்கினார்.
இந்த விருது மேலும் ஊக்கமளிப்பதாக விருது பெற்ற படைப்பாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பிரம்மாண்டமாக தொடங்கியுள்ள சென்னை புத்தகக் காட்சியில் அனைத்து விதமான புத்தகங்கள், அனைத்து வயதினருக்குமான புத்தகங்கள் என லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தகக் காட்சி வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் வாரநாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரையும் வாசகர்கள் அரங்குகளை பார்வையிடலாம் என தெரிவித்தார். பொதுமக்களுக்கு நுழைவுக்கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் கூறினார்.

