காலத்திற்கு ஏற்ப தங்களை அழகாகவும், இடத்திற்கு ஏற்ப தங்களை வசீகரமாகவும் காட்டிக் கொள்ள ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் முயற்சி செய்வார்கள். அழகாக காட்டிக் கொள்ள தாங்கள் உடுத்தும் ஆடை, ஆபரணங்கள், பிற அணிகலன்கள் என அணிந்து கொள்ளுவது வழக்கம். அவ்வரிசையில் இன்றைய இளைய சமுதாயத்திடம் பச்சைக் குத்திக்கொள்ளும் மோகம் அதிகரித்துள்ளது. அன்று முதல் இன்று வரை பச்சைக் குத்தும் வழக்கம் இருந்தாலும், இன்று அது ஆபத்தையும் விழைவிக்கும் ஓர் விஷயமாக மாறியது அதிர்ச்சியாக உள்ளது.
தங்களின் விருப்பமானவர்களின் பெயர்களை பச்சைக் குத்திக் கொண்டு தங்களின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு விஷயமாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. இன்று அது ஃபேஷன் என்ற பொருளில் உடலின் எல்லா பாகங்களிலும் பச்சைக் குத்திக் கொள்ளும் மோகம் அதிகரித்துவிட்டது. முன்பு அழியா பச்சை சாயத்தைக் கொண்டு ஊசி மூலம் வரைந்துக் கொள்வார்கள். இன்று பல்வேறு வண்ணங்களில் மின்சாரம் மூலம் இயங்கும் ஊசி கொண்டு மாதிரிகள் வரையப்படுகின்றன.
பச்சைக் குத்துவது மிக எளிமமையான காரியமல்ல. அது மிகவும் வலியை எற்படுத்தும். காலப்போக்கில் பச்சைக் குத்துவது ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அது சருமத்தின் வியர்வை சுரப்பியை பாதிக்கும் என்றும், சருமக் கோளாறுகள், சரும வியாதிகள் ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிக அதிகம் என கூறப்படுகிறது.
கடந்த வாரம் இந்தியாவில் நடந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பரிசோதித்து பார்த்ததில் எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்டது. இதே போல் பீகார் மாநிலத்திலும் ஒருவருக்கு எய்ட்ஸ் கண்டயறிப்பட்டது. அவர்களுக்கு எதன் மூலம் பரவியிருக்கும் என்று ஆராய்ந்ததில் பச்சைக் குத்தியன் மூலம் இவ்வைரஸ் பரவியிருக்கிறது. பச்சைக் குத்த பயன்படுத்தும் ஊசியில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் படிந்து, அது கவனக்குறைவால் மற்றவர்களுக்கும் அதே ஊசியில் பச்சைக் குத்தியதால் வந்த விழைவு.