ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ நிகழ்வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “இந்தியாவில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில், இந்தியாவில் மற்றொரு மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா சுயமரியாதைக்கானது, மறுபுறம் ‘ஏரோ இந்தியா’ ஆராய்ச்சிக்கான கும்பமேளா ” என்றார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், ஆயுதப் படைகளின் மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள், விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் நிறுவனத்தினர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ஐந்து நாட்கள் நடைபெறும், இதில் உலகளாவிய விண்வெளி நிறுவனங்களின் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் இந்தியாவின் வான்வழி வலிமை மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும். “தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் – உலகுக்காக தயாரிப்போம்” என்ற இந்தியாவின் பார்வையை மையமாகக் கொண்டு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்சார்பு செயல்முறையை விரைவுபடுத்த சர்வதேச ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்நிகழ்வு கருதப்படுகிறது.
