விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் பெயர் ‘ஜனநாயகன்’ என வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த தி கோட் திரைப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த திரைப்படம் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் எச். வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரியாமணி, கௌதம் மேனன், நரேன், மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ‘ஜனநாயகன்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. பர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் பிரபலமான செல்ஃபியை நினைவுகூறும் வகையில், அவர் நீல நிற சட்டையில், மக்களோடு செல்ஃபி எடுத்தப்படி இருந்தார்.
ஏற்கனவே இந்தப் படம் அரசியல் கலந்த கமர்ஷியல் படம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் தலைப்பு ‘ஜனநாயகன்’ என்றும், “நான் ஆணையிட்டால்” என்ற பாடல் வரியும் குறிப்பிட்டு போஸ்டர் வெளியிட்டு இருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
இத்திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்வதற்கு பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை டார்கெட் செய்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இரண்டாவது லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் விஜய், சிரித்தவாறே சாட்டையை சுழற்றியபடி போஸ் கொடுத்துள்ளார். அதில், ”நான் ஆணையிட்டால்” என்று எம்ஜிஆர் பாடலின் முதல் வரி இடம்பெற்றுள்ளது.

