தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 100 ரூபாயை தொட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று தொடர்ச்சியாக 100 ரூபாய்க்கே தக்காளி விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 80 ரூபாய் என அறிவிக்கப்பட்டாலும் சில்லறை கடைகளில் 100 ரூபாய்க்கே கிடைப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தக்காளி பயன்பாட்டிற்கு உள்நாட்டு விளைச்சல் மற்றும் வெளிமாநில வரத்தை நம்பியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தக்காளி விலை ஏற்றத்தை குறைக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் தக்காளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தக்காளியை கொள்முதல் விலைக்கே வழங்குவதற்கு, தமிழ்நாட்டில் உள்ள 65 பசுமை பண்ணை காய்கறி அங்காடிகள் மற்றும் நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தக்காளியை பதுக்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எச்சரித்துள்ளார்.