பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 104 பிணைக் கைதிகள் மீட்பு.

அரசியல் உலகம் செய்திகள் பாகிஸ்தான்

பாகிஸ்தானின் குவெட்டா நகரிலிருந்து பெஷாவர் நகரத்திற்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணத்தில், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் சென்றபோது தண்டவாளம் வெடித்து தகர்க்கப்பட்டது. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது பலுச் விடுதலை படையை (BLA) சேர்ந்தவர்கள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கைப்பற்றினர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் ஏற்பட்ட ரயில் கடத்தல் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி, 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், மேலும் 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பயணிகளை மீட்கும் முயற்சியில், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளை வீழ்த்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும், அனைத்து பிணைக் கைதிகளும் பாதுகாப்பாக மீட்கப்படும் என ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட பயணிகளில் 58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாலோசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தில் உள்ள மாக் நகருக்கு மற்றொரு ரயிலில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *