உலகளவில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள் உள்ளன. சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனம் ஐக்யூ ஏர், 2024 ஆம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், உலகின் மிக மோசமான காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. 2023-ல், டெல்லியில் காற்று மாசு குறியீடான பிஎம்2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 92.7 மைக்ரோ கிராமாக இருந்தது, இது 2024-ல் 91.6 ஆக குறைந்துள்ளது. பிர்னிஹட் (அசாம்), டெல்லி, முல்லன்பூர் (பஞ்சாப்), பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர் மற்றும் நொய்டா ஆகிய 13 இந்திய நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய அளவில் மிகவும் மோசமான காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில், 2023-ல் இந்தியா 3-வது இடத்தில் இருந்தது, ஆனால் 2024-ல் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் 2023-ல் பிஎம் 2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோ கிராமாக இருந்தது, இது 2024-ல் 7% குறைந்து 50.6 ஆக மாறியுள்ளது.
