அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப்-ஐ கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய புகாரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை FBI கைது செய்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஈரானின் முக்கிய தலைவரான மேஜர் ஜெனரல் குவாசிம் சுலைமாணி என்பவரை அமெரிக்கப் படைகள் கொன்றன. அதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை கொலை செய்ய ஈரான் திட்டம் தீட்டி ஆட்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாக அமெரிக்க ஆட்டர்னி ஜெனரல் Merrick Garland தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த அசிஃப் மெர்ச்சண்ட் என்பவர், ஈரானில் சில காலம் தங்கியிருந்ததாக FBI அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பணம் கொடுத்து கொலை செய்ய 2 ஆட்களை தேர்வு செய்த அசிஃப் மெர்ச்சண்ட், சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு முன்பணமாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பென்சில்வேனியாவில் பரப்புரையின் போது டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஒருநாள் முன்பாக அசிஃப் மெர்ச்சண்ட் கைது செய்யப்பட்டதாகவும், எனினும், அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் அசிஃபிற்கும் தொடர்பில்லை என்றும் FBI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.