உலக அகதிகள் தினம்

செய்திகள்

அகதி, இந்த சொல்லே சிலரில் ஒரு ஏளனத்தையும், சிலரில் ஒரு பச்சாதாபத்தையும், மற்ற சிலரில் வெறுப்பையும், வேறு சிலரில் புறக்கணிப்பையும் தருவதை நாம் உணர்ந்தறிந்திட முடியும். ஆனால் அந்த வார்த்தைக்கு பின்னாலான வலியும், அவர்கள் சந்தித்திருக்கும் இழப்புகளும் அதை அனுபவத்தறிந்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

வீடற்று நாடற்று, கிடைக்கும் புகலிடத்தில் தஞ்சம் புகுந்து, ஆசைகள் கனவுகளைக் களைந்து, பசிக்கான வயிறோடும் பாழாய்ப் போன வாழ்வோடும் போராட வேண்டி வரும் நிலை தான் அகதிகளின் எதார்த்தம். தங்களுக்கான இடத்தையும் நாட்டையும் விட்டு, ஆதிக்கத்தாலோ, அரசாங்கத்தின் கெடுபிடிகளாளோ, உள்நாட்டுப் போர் மற்றும் வன்முறை காரணமாகவோ இடம்பெயர கட்டாயப்படுத்தப்பட்டு நாடு கடந்து தஞ்சம் புகுபவர்களை அகதிகள் என்றழைக்கின்றனர். ஒரு நாட்டின் சாதாரண குடிமக்களாக ஒரு காலத்தில் திகழ்ந்த அவர்களுக்கு, அகதிகள் என்றான பின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவது வேதனை.

அனைத்து நாடுகளின் வளர்ச்சியும் எழுச்சியும், போர்களும் அரசியலும் உருவாக்கிடுவதென்னவோ அகதிகளை தான். கூடவே பசி, பட்டினி மற்றும் வறுமையும். அனைத்து வெற்றி வரலாறுகளும் யாரோ ஒரு சிலரை அகதிகளாக மாற்றியிருப்பதை வரலாற்றின் வழிநெடுக காணலாம். அத்தகைய அகதிகளைக் குறித்து எண்ணவும், அவர்களின் இழப்புகளைக் குறித்து விவாதிக்கவும் ஐ.நா ஏற்படுத்தியிருக்கும் நாள் தான் உலக அகதிகள் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம் 20ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அகதிகளின் நல்வாழ்வுக்காகவும், வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களையும், உதவிகளையும், நிகழ்ச்சிகளையும் உலகம் முழுக்க ஏற்படுத்துகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி 83 மில்லியன் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வசித்து வருகின்றனர். அதில் 1.1 மில்லியன் மக்கள் கடந்த 2020ஆம் ஆண்டு அகதிகளாக்கப்பட்டவர்கள். உலகின் அகதிகளில் மூன்றில் ஒரு பங்கு அகதிகள் வெறும் ஐந்து நாட்டை மட்டுமே சேர்ந்தவர்கள் என தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம்.

அகதிகள் தங்கள் கனவுகளை, ஆசைகளை, எதிர்காலத்தைத் தொலைத்தவர்கள். அவர்களின் தேவை அவர்களுக்கான சம உரிமையும், மரியாதையான ஒரு அடிப்படை வாழ்க்கையுமே. அகதிகள் என்பதாலே அவர்கள் சுரண்டப்படுவதும், பாலியல் ரீதியாக சீண்டப்படுவதும், புறக்கணிக்கப்படுவது பரவலாக நடந்தேறி வருகிறது. இந்த நிலை மாற உலகின் அரசாங்கங்கள் துணை நிற்க வேண்டும். சம உரிமைகளுடனான ஒரு வாழ்வை அவர்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே பெரும்பாலான அகதிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த அகதிகள் நாளில் நாமும் உறுதிமொழி ஏற்போம். அகதிகளை சம மனிதர்களாக மதிப்போம். வாய்ப்புகளை உருவாக்கி வாழ்க்கையை மேம்படுத்த சபதம் ஏற்போம்.

  • சிறப்பு நிருபர்
    NRI தமிழ்

Leave a Reply

Your email address will not be published.