இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்படுத்துவதற்கு தனியாக வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. தற்போது இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் டெலிகாம் சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி (GST) வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் கூடுதலாக மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கே தனி வரி விதிக்கும் வாய்ப்பு குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.இந்த புதிய வரி நடைமுறைக்கு வந்தால், அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.22,900 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இணைய பயன்பாடு மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் சேவைகள் மூலம் அரசின் வருவாயை உயர்த்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வரி அமல்படுத்தப்பட்டால் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மற்றும் டேட்டா சேவை கட்டணங்கள் உயரக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளன. தற்போது இது ஆய்வு நிலைத் திட்டமாக இருப்பதால், இறுதி முடிவு அரசின் அறிக்கையை தொடர்ந்து எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

