மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மதுரைக்கு புறப்பட்டார்.வழியெங்கும் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடத்துடன் பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை மதுரையை நோக்கி வரவேற்றனர் . இன்று பச்சை பட்டு உடுத்தி,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலா்மாலையை அணிந்து கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி அதிகாலை 3 மணி அளவில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். இந்நிலையில் காலை 6 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகருக்கு வந்து கண்டு களித்தனர்.

