வினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கு மீண்டும் 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரில் கடந்த 26-ம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்ற நிலையில் நேற்று (ஆக. 12) இரவு நிறைவடைந்தது. முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்கள் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்ற அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். தங்கப் பதக்கத்துக்காக காத்திருந்த அவர், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். இந்த சூழலில் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

