தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்.8) அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து, சபாநாயகருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் போது, திங்கட்கிழமை (நேற்று) அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிக்கும் வகையில் ‘யார் அந்த தியாகி’ என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். அவர்கள் தொடர்ந்து டாஸ்மாக் ஊழலைப் பற்றிய விவாதங்களை முன்னெடுக்க, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.சட்டப்பேரவைத் தலைவர் பேட்ஜ் அணிந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றியதுடன், அவர்களை ஒரு நாள் மட்டும் சட்டப்பேரவையில் இருந்து தற்காலிகமாக சஸ்பென்ட் செய்தார். இதன் காரணமாக, இன்று சட்டப்பேரவைக்கு வந்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள்,செங்கோட்டையன் உள்பட, சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்தனர்.

