யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளது. யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர் ரஷ்யாவின் தென் பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் அதன் தலைவர் பிரிகோஷின் தெரிவித்துள்ளார்.
யுக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்யாவுக்குத் உறுதுணையாக களத்தில் நின்ற அதன் ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. நேற்றிரவு அந்த கூலிப்படையினர் யுக்ரேன் எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைந்து, ரோஸ்டோவ் – ஆன் – டான் நகரில் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர்.
கருங்கடலோரம் அமைந்துள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் தகவல்கள் கசிந்துள்ளன. வோரோனேஸ் நகரை உள்ளடக்கிய பரந்து விரிந்த வோரோனேஸ் ஓப்ளாஸ்ட் பிராந்தியத்தின் வழியே அப்படையினர் மாஸ்கோ நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. இந்த நகரம் மாஸ்கோவில் இருந்து 482 கி.மீ. தெற்கே இருக்கிறது.
ரோஸ்டோவ்-ஆன்-டான் நகருக்கும், தலைநகர் மாஸ்கோவுக்கும் நடுவே கிட்டத்தட்ட பாதி தொலைவில் உள்ள வெரோனேஸ் நகரில் ராணுவ முகாம்கள், தளவாடங்களை வாக்னர் கூலிப்படை கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
வாக்னர் படைகள் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதால் ரஷ்யாவில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
மாஸ்கோ நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்களும், கவச வாகனங்களும் வீதிகளில் வலம் வருகின்றன.
