
திருச்செந்தூர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் லட்சக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு ஆவணித் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக 23-ம் தேதி திருக்கோயில் யானை தெய்வானை மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட இருக்கிறது. 24-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இன்று மாலை 6 மணிக்கு அப்பர் சுவாமிகள், திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு ரத வீதிகளில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இரவில் ஸ்ரீபெலிநாயகர், அஸ்திரத் தேவருடன் பல்லக்கில் 9 சந்நிதிகளில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழா நாள்களில் தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவார்கள்.
முக்கிய நிகழ்ச்சியாக 30-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகுசட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறும்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

