கிண்டியில் ரூ.230 கோடி செலவில்1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதன்படி சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரைத் தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இதயம், நுரையீல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சைகள், 1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்காக, அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கும் பணி, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணத்தால் மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையை ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், குடியரசுத் தலைவர் வராததால், இந்த மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

