பாஜக – அதிமுக இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டு வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கூட்டணி தர்மத்தை மீறி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. கட்சியின் கருத்தைத்தான் நான் சொல்கிறேன். தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி குறித்து பார்த்துக்கொள்ளலாம். தனித்து போட்டியிட்டால் அண்ணாமலை நோட்டாவுக்கு கீழ்தான் ஓட்டு வாங்குவார். கூட்டணியில் பாஜக இல்லை என்றால் அவர்களுக்குத்தான் இழப்பு. அதிமுகவுக்கு இழப்பு இல்லை. கூட்டணியில் பாஜக இல்லை என்றால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் சந்தோஷப்படுகிறான்’’ என்றார்.
முன்னதாக, சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய அண்ணாமலை, மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பேசியதாகவும், பின்னர் முத்துராமலிங்க தேவர் ஆவேசம் அடைந்ததால் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து அண்ணா ஓடி வந்ததாகவும் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்தில் அண்ணாமலை திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்மமாக குற்றஞ்சாட்டினார்.
அண்ணாவை பற்றி யார் தவறாக பேசினாலும் நாக்கு அழுகிவிடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாபம் விடுத்தார்.முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அவதூறாக பேசினால் அதிமுகவினர் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அதிமுக தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பின்னர், பேரறிஞர் அண்ணா சர்ச்சைக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, ” யாருக்கும் அடிபணிந்து செல்ல வேண்டிய நிலை தனக்கு இல்லை, 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை இது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை போத்தனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேர்மை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்றும் கூறி இருந்தார்

