பொங்கல் விழாவையொட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்க இத்திட்டம் பெரிதும் உதவியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன் பணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி ஒரு கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

