இந்தியா தர்ம சத்திரம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்து, வேறு நாட்டிற்கு செல்லலாம் என கூறியது.
இலங்கை தமிழர் ஒருவர் கடந்த 2015ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2018ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு அவரது சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிறைத் தண்டனை முடிந்ததும், அவர் இலங்கைக்கு நாடுகடத்தவும் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அந்த இலங்கைத் தமிழர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய இருவர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி தீபங்கர் தத்தா, “140 கோடி மக்களுடன் போராடி வாழ்ந்து வரும் இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது” எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர் இலங்கையில் செயல்பட்டு வந்த போராட்டக் குழுவில் இருந்தவர். தற்போது இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அங்கு கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாவார் எனும் வாதத்தை முன்வைத்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், “உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்குமா? 140 கோடியுடன் நாங்கள் சிரமப்படுகிறோம். உலகில் இருப்பவர்களை எல்லாம் வரவேற்க இது ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது” என வாய்மொழியாக தெரிவித்தனர். மேலும், இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால் வேறு ஏதாவதொரு நாட்டிற்கு செல்லுங்கள் எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

