இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சில இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சிறிய பதட்டம் ஏற்பட்டது.ஆனால் இப்போது, இருநாட்டு பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் நன்றாக நடைபெறுவதாகவும், பிரதமர் மோடி தனது நெருங்கிய நண்பர் என்றும் தெரிவித்துள்ளார். அவரிடம் “அடுத்த ஆண்டு இந்தியா வருகிறீர்களா?” என்று கேட்டபோது, டிரம்ப் “ஆம், வாய்ப்பு உள்ளது” என பதிலளித்தார். மேலும், “மோடி ஒரு சிறந்த மனிதர், என் நண்பர்; நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறோம்” என்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் “குவாட் மாநாட்டுடன்” இணைந்து டிரம்ப் பயணம் அமையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், டிரம்ப் 2020 பிப்ரவரியில் தனது முதல் பதவிக் காலத்தில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

