கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த இரு விழாக்களும் பக்தர்களின் பேரன்பையும் பெரும் திரளான வருகையையும் பெறும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளாகும்.இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, அடுத்தடுத்த நாட்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி 3ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை, கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

