ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு கடந்த 14 நாட்களில் இது நான்காவது முறை இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலில் வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை மற்றும் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பாதுகாப்பு சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக்கொள்ள ஈரானுக்கு முழு உரிமை உள்ளது என்றும் அப்பாஸ் அரக்ஸி தெரிவித்ததாக கூறப்படுகிறது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 28ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் பின்னர் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் Strait of Hormuz (ஹார்முஸ் ஜலசந்தி) பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியாவிற்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்கள் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக செல்ல அனுமதி வழங்குவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

