புற்றுநோய்க்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தும் ‘இம்யூனோதெரபி’ சிகிச்சை, மருத்துவ உலகில் புதிய நம்பிக்கையை உருவாக்கி வருகிறது. பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இந்த சிகிச்சை பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு முன்னேறியுள்ளது. 71 வயதான மௌரீன் சிடெரிஸ் இதற்குச் சிறந்த உதாரணம். 2008-ல் பெருங்குடல் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்த அவர், 14 ஆண்டுகள் கழித்து உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த முறை, ‘டோஸ்டார்லிமாப்’ என்ற இம்யூனோதெரபி மருந்து அவருக்கு வழங்கப்பட்டது. மூன்று வாரத்திற்கு ஒருமுறை மருந்து செலுத்தப்பட்ட நிலையில், நான்கு மாதங்களிலேயே அவரது கட்டி முழுமையாக மறைந்தது. அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை எதுவும் தேவையில்லை.
இம்யூனோதெரபி என்றால் என்ன?இது உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, புற்றுநோய் செல்களை கண்டறிந்து அழிக்க உதவும் சிகிச்சை முறை. சில நேரங்களில் புற்றுநோய் செல்கள் உடலின் பாதுகாப்பு அமைப்பை ஏமாற்றி வளர்ந்து விடுகின்றன. இம்யூனோதெரபி அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, நோய் எதிர்ப்பு மண்டலம் தாக்க உதவுகிறது.
இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய இம்யூனோதெரபி முறைகள்:
- CAR T-செல் சிகிச்சை – நோயாளியின் நோய் எதிர்ப்பு செல்களை மாற்றி, புற்றுநோயை தாக்கும்படி உருவாக்குவது.
- இம்யூன் செக்பாயிண்ட் இன்ஹிபிட்டர்கள் – புற்றுநோய் செல்கள் மறைவதை தடுத்து, உடல் அவற்றை தாக்க உதவும் மருந்துகள்.
இந்த சிகிச்சைகள் பலருக்கு நன்மை அளித்தாலும், எல்லோருக்கும் ஒரே மாதிரி பலன் தராது. தற்போது சுமார் 20% முதல் 40% நோயாளிகள் வரை மட்டுமே அதிக நன்மை பெறுகின்றனர். சிலருக்கு தோல் பிரச்சினை, சோர்வு, வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளும் ஏற்படலாம். இதனால், ஆராய்ச்சியாளர்கள் இம்யூனோதெரபியை மேலும் பலருக்கு பயனுள்ளதாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். அதிக நார்ச்சத்து உணவு, குடல் நுண்ணுயிர் மாற்றங்கள், ஸ்டேடின் போன்ற மருந்துகள், சிகிச்சை நேரம் போன்றவை கூட இதன் பலனை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும், கதிர்வீச்சு சிகிச்சை அல்லது அல்ட்ராசவுண்ட் போன்ற முறைகளுடன் இம்யூனோதெரபியை சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். அதோடு, ஒவ்வொரு நோயாளியின் மரபணு தன்மைக்கு ஏற்ற தனிப்பயன் சிகிச்சைகளும் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம். புற்றுநோய் தடுப்பூசிகளும் இப்போது புதிய நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றன. நோயாளியின் உடலில் இருக்கும் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு தாக்கும் வகையில் தனிப்பயன் தடுப்பூசிகள் உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர்கள் கூறுவதாவது, இன்னும் பல ஆய்வுகள் தேவைப்பட்டாலும், இம்யூனோதெரபி ஏற்கனவே பலரின் வாழ்க்கையை மாற்றி வருகிறது. எதிர்காலத்தில் கீமோதெரபி, கதிர்வீச்சு போன்ற பாரம்பரிய சிகிச்சைகளை விட குறைந்த பக்கவிளைவுகளுடன், சிறந்த சிகிச்சை வாய்ப்புகள் உருவாகலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

