வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை எளிதாக்கும் வகையில், இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI புதிய ஆன்லைன் KYC வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, டிசம்பர் 3 முதல் தகுதியுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களான NRI, OCI மற்றும் வெளிநாட்டினர் தாங்கள் வசிக்கும் நாட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் KYC நடைமுறைகளை முடிக்க முடியும். இதற்காக இந்தியாவிற்கு நேரில் வர வேண்டிய அவசியம் இருக்காது.
பாஸ்போர்ட் நகல், OCI அட்டை மற்றும் வெளிநாட்டு முகவரிக்கான சான்றுகள் போன்ற தேவையான ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். மேலும், வீடியோ சரிபார்ப்பு மூலமாகவும் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும்.
இந்த வசதி FATF விதிமுறைகளைப் பின்பற்றும் நாடுகளில் வசிக்கும் தகுதியானவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நாடுகளில் வசிப்பவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள KYC விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
இந்தப் புதிய வசதியின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு வராமலேயே பங்குச்சந்தை முதலீட்டுக்கான KYC நடைமுறைகளை முடிக்க முடியும். இதனால் பயணச் செலவு மற்றும் நேரம் மிச்சமாகும். மேலும், வெளிநாடுகளில் இருந்தபடியே இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான நடைமுறைகளும் எளிதாகும்.
