ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆறுகள், நீர்நிலைகளில் கூடி பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி

ஆடி அமாவாசையான இன்று ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்களில் ஆடி அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி, முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதன்படி ஆடி அமாவாசையான இன்று தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் இன்று அதிகாலை முதலே மக்கள் திரண்டு வந்து, முன்னோர்களுக்கு அரிசி, பழங்கள், காய்கறிகள், பூ, வெற்றிலை, பாக்கு வைத்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்தனர். தஞ்சை பெரிய கோயில் புது ஆற்று படித்துறை, வடவாற்று படித்துறை, வெண்ணாற்று படித்துறை, சுவாமிமலை காவிரி படித்துறை, கும்பகோணம் பாலக்கரை காவிரி படித்துறை, மகாமகக்குளம் உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரைகளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் கும்பகோணம் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, திருமஞ்சனம் படித்துறை, கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், திருவாரூர் கமலாலய குளம், மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் இன்று ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.
கன்னியாகுமரி, ஆடி அமாவாசையையொட்டி முன்னோருக்கு பலி தர்ப்பணம் செய்ய இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர். திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜைகள் செய்தனர். பின்னர் பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள், தர்ப்பை புல் ஆகியவற்றை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு நீராடினர். அதைத்தொடர்ந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. 4.30 மணிக்கு வடக்கு பிரதான வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நேற்று கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு தங்களது முன்னோருக்கு பலி தர்ப்பணம் செய்தனர். இன்று 2வது நாளாகவும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சதுரகிரி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடி அமாவாசை திருவிழா. இன்று ஆடி அமாவாசை என்பதால் விருதுநகர், மதுரை, சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, தென்காசி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலும் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவிந்தனர். அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சென்னை கடற்கரை, கடலூர் சில்வர் பீச், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *