துபாய் 24 மணி நேர கார் பந்தயம், 2015 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இது, மத்திய கிழக்கு நாடுகள் கோப்பைக்காக முதல் தகுதி போட்டியாகும். உலகின் முன்னணி நாடுகளின் வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில், மொத்தம் 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கு முன்பு இதில் பங்கேற்ற ஒரே இந்திய வீரர் சீராங் ஆர்யா ஆவர். 2015 ஆம் ஆண்டு பிரிட்டன் அணி ஒன்றுக்காக A-6 Pro என்ற பிரிவில் பங்கேற்றார்.
அதன் பிறகு இந்தியர்கள் யாரும் இந்த போட்டியில் பங்கேற்காததால், பரிச்சயம் கிடையாது என்ற வரலாற்றை தற்போது அஜித் மாற்றியமைத்துள்ளார்.
24 மணி நேரம் நடக்கும் இந்த போட்டியில் ஒரு அணியில் குறைந்தது மூன்று பேர் முதல் அதிகபட்சம் ஐந்து பேர் வரை பங்கேற்கலாம். ஒரு நிமிடத்தில் Pitstop இல் எரிப்பொருள் நிரப்பிக் கொள்வதுடன் வீரர்கள், டயர் உள்ளிட்டவற்றையும் மாற்ற வேண்டும். ஒரு வீரர் 2 மணி நேரம் காரை இயக்க வேண்டும், மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான விதிகள் உள்ளன. அதில் அதிக கிலோ மீட்டர் ஓட்டும் அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும்.
இதில் 992 ஆவது பிரிவில், கடைசி ஒரு மணி நேரத்தில் அஜித் அணி மூன்றாம் இடம் பிடித்தது, திரைப்பட சேசிங் காட்சியை மிஞ்சும் அளவிற்கு விறுவிறுப்பானது. அஜித் அணியை விட ஒரு நிமிடம் 30 வினாடிகள் முன்பாக மூன்றாவது இடத்தில் QMMF என்ற கத்தார் அணி சென்றுக்கொண்டிருந்தது. அந்த அணி எரிபொருள் நிரப்ப pitstop செல்லும் போது, அஜித் அணிக்கு ஒரு நிமிடம் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கத்தார் அணி Code 60 அதாவது அதிகபட்ச வேகம் 60 கிலோ மீட்டர் மற்றும் ஓவர் டேக்கிங் செய்யக்கூடாது என்ற வசதியை பயன்படுத்தி விட்டது.
இதனால் அஜித் அணிக்கு 10 வினாடிகளும் கத்தார் அணியின் பெனால்டி காரணமாக 10 வினாடிகளும் கிடைத்தது. அதே சமயம் code 60 என்பது ஒரு முழு சுற்றிற்கு பொருந்தும். இதனால் 60 கிலோ மீட்டர் வேகத்தில் கத்தார் அணி தொடக்கப்புள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால், அஜித் அணிக்கு மேலும் ஒரு 30 வினாடிகள் கிடைத்தது. அடுத்த 5 சுற்றுகளிலும் 12 வினாடிகளை குறைத்து முன்னோக்கி வந்தனர். இப்படி கடைசி 15 நிமிடங்களில் தான் அஜித் அணிக்கு 3ஆவது இடம் உறுதியானது.
