270 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் சிறப்பு செய்திகள்

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பல பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்மநாப சாமி கோயில் மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கோயிலுக்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருகிறார்கள். கோயிலின் புனரமைப்பு பணிகள் 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தொடங்கப்பட்டன. கொரோனாவின் காரணமாக இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் 2021ம் ஆண்டு முதல் மீண்டும் பணிகள் தொடங்கின.

இந்த நிலையில் 270 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், சன்னதியின் முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல் கோபுரத்தில் இருக்கும் கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில ஆளுநர் விஷ்வநாத் ராஜேந்திர அர்லேக்கர், தற்போதைய திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் தலைவர் மூலம் திருநாள் ராம வர்மா உள்ளிட்ட பிரமுகர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண திரண்டு இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *