சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்ததாகவும், போக்குவரத்து வசதி செய்து கொடுத்து உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டது.
இதனை தொடர்ந்த அவரது வீட்டிற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நடிகர் விஷ்ணு விஷாலையும், அவரது வீட்டில் தங்கியிருந்த பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கானையும் மீட்டனர். இந்த தகவலை நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தான் வெள்ளத்தால் சிக்கி தவிப்பதாக பதிவிட்ட சில மணி நேரத்தில் மீட்ட தீயணைப்புத்துறையினருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது தங்களை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்ததாகவும், போக்குவரத்து வசதி செய்து கொடுத்து உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.
“எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த, எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் சார், எங்கள் வில்லா நண்பர்களுக்கும் எனக்கும் போக்குவரத்து உதவிகளை ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித் சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

