மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை கார் பந்தயத்தை தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் முறை நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக், வருகின்ற டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற இருந்தது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே இதற்கு தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபார்முலா-4 கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அரசு செலவில் சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதமானது என்றும், பந்தயத்தை சாலையில் நடத்துவதால் சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும் உயிரிழப்பு நேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரிட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேதி குறிப்பிடப்படாமல் போட்டி ஒத்திவைப்பட்டு உள்ளதால் விரைவில் மாற்று தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

