பெங்களூருவில் நடைபெற்ற ஆளும் பாஜகவுக்கு எதிரான ஆலோசனைக்கூட்டத்தில் கூட்டணிக்கு ‘INDIA’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள், ஒன்றிணைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. பாஜகவுக்கு எதிராக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாள் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போன்று, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, “ பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பொருள்படும்படியாக இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பை அழிக்கத்துடிக்கிறது பாஜக. அதை நாங்கள் கூட்டாக இணைந்து முறியடிப்போம். கூட்டணிக்கு ஒருமனதாக பெயர் சூட்டியது எதிர்க்கட்சிகளின் முதல்வெற்றி. பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை அங்கு சிறிய, சிறிய கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறாத கட்சிகளே பாஜக கூட்டணியில் அதிகமாக உள்ளன.” என்றார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக்கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்காக டெல்லியில் அலுவலகம் அமைக்கப்படும். இந்த கூட்டணியை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்
