கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷு தினத்திலிருந்து, கடவுள் அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்களின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற சபரிமலை கோவில், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு, அய்யப்பன் உருவம் கொண்ட தங்க டாலர்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது, இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, ஆன்லைனில் பதிவு செய்த 100 பக்தர்களுக்கு இந்த டாலர்கள் வழங்கப்பட்டன. ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பக்தர், அமைச்சர் வி.என்.வாசவனிடமிருந்து முதல் தங்க டாலரை பெற்றார். அய்யப்பன் உருவ தங்க டாலர் மூன்று வெவ்வேறு எடைகளில், 2, 4 மற்றும் 8 கிராம், கிடைக்கிறது. 2 கிராம் தங்க டாலரின் விலை 19,300 ரூபாய்; 4 கிராம் தங்க டாலர் 38,600 ரூபாய்; 8 கிராம் தங்க டாலர் 77,200 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த டாலர்களை வாங்க விரும்பும் நபர்கள், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்ட் அறிவித்துள்ளது.

