1998-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில்பட்டய படிப்பும் முடித்துள்ளார். இந்திய காவல் பணி பயிற்சி முடித்தவுடன் நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் பின்னர் துணை ஆணையராக சென்னை அண்ணா நகர் மற்றும் புனித தோமையார்மலை மாவட்டங்களில் பணிபுரிந்ததோடு, சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
2012-ம் ஆண்டு காவல்துறை துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவராகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் – ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2016-ம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராகவும், சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2021-ம் ஆண்டு 2-வது முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றியுள்ளார்.
2022-ம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.கடந்த ஜூன் மாதம் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்ற அருண், தற்போது சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சென்னையின் 110 ஆவது காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.