ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின் போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவம், இலக்கியம், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை ஒன்றிய அரசு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியிட்டது. 7 பேர்க்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேர்க்கு பத்ம பூஷண் விருதும், 113 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை நிபுணர் chef தாமு, பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (பத்மஸ்ரீ), நந்தமுரி பாலகிருஷ்ணா (பத்ம பூஷன்), அரிஜித் சிங் (பத்மஸ்ரீ), சமையல் கலைஞர் தாமு (பத்மஸ்ரீ) போன்ற பிரபலங்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதுகளைப் பெற்றனர். இந்த ஆண்டில், 23 பெண்கள் மற்றும் 10 வெளிநாட்டவர்கள் உட்பட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 113 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.

