போலி அனுமதிக் கடிதங்களைப் பயன்படுத்தி விசா பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நாடு கடத்தப்படும் வாய்ப்பை எதிர்கொள்ளும் ஏராளமான இந்திய மாணவர்கள், தாங்கள் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டதை நிரூபிக்கும் வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்கான செயல்முறையை கனேடிய அரசாங்கம் உருவாக்கி வருவதாக குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர்கள், பெரும்பாலும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், கல்வி நிறுவனங்களுக்கான அனுமதிக் கடிதங்கள் போலியானவை என்று அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, கனடாவில் இருந்து நாடு கடத்தப் படுகிறார்கள். கடந்த மார்ச் மாதம் இந்த மாணவர்கள் கனடாவில் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பித்த போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
திங்களன்று பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் சீன் பிரேசர், “மோசடிக்கு ஆளான அப்பாவி மாணவர்கள் தாங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதை நிரூபிக்க அனுமதிக்கப்படுவார்கள்” என்பதை வலியுறுத்தினார்.
அரசாங்கம் அவர்களுக்கு “பொருத்தமான தீர்வை” வழங்கும், அதே நேரத்தில் பல மாணவர்கள் “தாங்கள் போராடும் நிச்சயமற்ற தன்மையால் மீள வழியில்லா மனநலக் கவலைகளுக்கு உள்ளாகிறா்கள்” என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான ஜென்னி குவானின் கேள்விக்கு பதிலளித்த ஃப்ரேசர், “அவர்கள் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை நிரூபிக்கவும், அவர்களுக்குப் பொருத்தமான தீர்வை வழங்கவும் அனுமதிக்க ஒரு செயல்முறையை நாங்கள் உருவாக்குவோம்” என்று உறுதியளித்தார்.