“அரசாங்கத்தை விமர்சிப்பதால் ஒரு ஊடகத்தை முடக்க கூடாது” என்று உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.மலையாள சேனல் மீடியா ஒன் மீதிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மத்தியில் பிஜேபி தலைமையிலான அரசாங்கத்துடன் பல முறை கருத்து வேறுபாடுகள் கொண்ட மீடியாஒன் மலையாள சேனலின் பெயரைத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து ஜனவரி 31 நீக்கப்பட்டது.
மீடியாஒன் தடைசெய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். மார்ச் 2020 இல், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்களைக் குறித்த செய்தியை வெளியிட்டபோது, கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் சட்டம் 1998ஐ மீறிய குற்றச்சாட்டின் பேரில், 48 மணிநேரம் சேனலுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்களன்று மலையாள செய்தி சேனலின் ஒளிபரப்பை நிறுத்தியது. ஜமாத்-இ-இஸ்லாமியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மீடியாஒன் சேனல் “பாதுகாப்பு காரணங்களை” மேற்கோள் காட்டி திங்கள்கிழமை நண்பகல் முதல் மத்திய அரசால் முடக்கப்பட்டது.
இந்நிலையில் பாதுகாப்பு அனுமதி இல்லாததால் சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு கோரிக்கைகள் என்று இல்லாத ஒன்றை எல்லாவற்றிற்கும் காரணம் காட்டுவதாக உள்துறை அமைச்சகத்தையும் கடிந்து கொண்டது.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மீடியாஒன் சேனல் விமர்சித்ததை தேச விரோதம் அல்லது ஒற்றுமைக்கு எதிரானது என்று கருத முடியாது என்றும், துடிப்பான ஜனநாயகத்திற்குப் பத்திரிகை சுதந்திரம் மிகவும் அவசியம் என்றும் நீதிமன்றம் கூறியது.
“மக்களின் உரிமைகளை மறுத்து தேசிய பாதுகாப்பை உயர்த்த முடியாது. இந்த வழக்கில் உள்துறை அமைச்சகம் கேவலமான முறையில் நடந்து கொண்டுள்ளது” என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிமன்றம் கூறியுள்ளது.
2020ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் குறித்து விரிவாகப் புகாரளித்த சில சேனல்களில் ஒன்றான மீடியாஒன் மீதான ஒளிபரப்புத் தடையை விதிக்கும் முடிவை நியாயப்படுத்துவதற்கான எந்தவொரு உண்மைகளையும் ஆதாரங்களையும் மத்திய அரசு காட்டத் தவறிவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
பத்திரிகைகள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்க ஒருக்கிலும் அனுமதிக்க முடியாது என்றும் தமது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தை விமர்சிப்பது ஒரு தொலைக்காட்சி சேனலின் உரிமத்தை ரத்து செய்வதற்கான காரணமாக இருக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.