திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பக்தர்களின் ஆரோகரா கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரபத்மனை முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட இடமாக இருப்பதால், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து, தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி, வேல் வகுப்பு மற்றும் வீரவாள் வகுப்பு ஆகியவை நடைபெற்றன.மாலை 4.15 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்வதற்காக போர்க்கோலம் பூண்டு சஷ்டி மண்டபத்திலிருந்து கடற்கரைக்கு புறப்பட்டார். மாலை 4.30 மணியளவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். இதற்குமுன், சிவன் கோயிலில் இருந்து சூரபத்மன் எழுந்தருளி உள்மாட வீதி மற்றும் ரதவீதிகளை சுற்றி கோயில் கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்தார். இதற்குப் பிறகு சூரசம்ஹாரம் தொடங்கியது.முதலில், கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமியை ஆணவத்தோடு மூன்று முறை வலம் வந்து போரிட்டான். அவனை, மாலை 4.54 மணிக்கு ஜெயந்திநாதர் தனது வெள்ளி வேலால் வதம் செய்தார். இரண்டாவது முறையாக, சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.10 மணிக்கு, மூன்றாவது முறையாக சுயரூபத்துடன் போரிட்ட சூரபத்மனை 5.22 மணிக்கு வதம் செய்தார். பின்னர், மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டார் ஜெயந்திநாதர்.அப்போது கடற்கரையில் அலைகளாக திரண்டிருந்த பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கச் செய்தது.

