குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா, பக்தர்களால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமியாக மதிக்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, துவாரகா மற்றும் பெட் துவாரகா பகுதிகளில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் அகழாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு எந்தவொரு அகழாய்வு பணிகளும் நடைபெறவில்லை. தற்போது, இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ.) துவாரகா கடலில் ஆழ்கடல் அகழாய்வுகளை ஆரம்பித்துள்ளது. தொல்லியல் துறையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அலோக்திரிபாதி தலைமையில் 5 ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், துவாரகா கடற்கரையில் நீருக்கடியில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை, அபராஜிதா சர்மா, பூனம்விந்த் மற்றும் ராஜ்குமாரி பார்வினா என்ற மூன்று பெண் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் குஜராத் கடற்பகுதியில் கோமதி க்ரீக்கிற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

