ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதால், இந்நாண்டுக்கான எஸ்சிஓ மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பினரான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்வை முன்னிட்டு, ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார், ஆனால் அவர் பதிலாக ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். இதனையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் வழங்கிய இரவு விருந்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது, ஷெபாஸ் ஷெரீப், ஜெய்சங்கரை கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். இன்று, மாநாட்டின் இரண்டாவது நாளில், ஜெய்சங்கர் மாநாட்டின் இடத்திற்கு வந்தபோது, ஷெபாஸ் ஷெரீப் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இந்த மாநாட்டில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2016-ம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் செல்லும் முதல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆக இருக்கிறார். 2016, ஆகஸ்ட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில், அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமாபாத் சென்றார். அதன் பிறகு, எந்த இந்திய அமைச்சரும் பாகிஸ்தான் செல்லவில்லை.

