சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளைக் கரைக்கப் பிரமாண்டமான ஏற்பாடுகள்; சென்னை காவல்துறை ஆய்வு

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை (ஆகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை) கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்த ஏற்பாடுகளை சென்னை பெருநகரக் காவல் துறை இணை ஆணையர் விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வீடுகளில் சிறிய களிமண் சிலைகள் வைத்து வழிபட்டதுபோல், பொது இடங்களிலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகத்தினரால் பெரிய விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. இந்தச் சிலைகளை நாளை கடலில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1,519 சிலைகள் கரைக்கப்பட உள்ளன. சிலை கரைப்பு விழா நடைபெறும் நான்கு முக்கியக் கடற்கரை பகுதிகளில், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர், திருவொற்றியூர் ஆகிய இடங்கள் அடங்கும். இதில் குறிப்பாக, பட்டினப்பாக்கம் கடற்கரையில் பெரிய சிலைகளைக் கரைக்கப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மூன்று கிரேன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதிக சிலைகள் வருவதைக் கருத்தில் கொண்டு, மொத்தம் 5 கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பெரிய சிலைகளை ஏற்றி வரும் வாகனங்கள் எளிதாகச் செல்ல, கடற்கரை மணல் மீது ஒரு அடி உயரத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது.
7 அடிக்குக் குறைவான சிலைகளை ரேம்ப் மூலம் கடலில் தள்ளிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறிய சிலைகளைக் கரைக்க மூன்று தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிலைகளைக் கொண்டுவரும் வாகனங்கள், காவல்துறை அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த ஆய்வின்போது, காவல்துறை உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *