வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியானது. கேரளாவில் அதிகாலை 4 மணிக்கும், கர்நாடகாவில் காலை 6 மணிக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ள விஜய் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் ‘தி கோட்’ படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே உச்சத்தில் இருந்தது. தி கோட்’ படத்தின் ரிலீஸை விஜய் ரசிகர்கள் ஆடல், பாடல், பட்டாசு, பாலபிஷேகம் என திருவிழா போல கொண்டாடித் தீர்த்தனர். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1,100 திரையரங்குகளில் விஜயின் ‘தி கோட்’ வெளியானது.
உலகம் முழுவதும் 4000+ திரைகளில் வெளியானது. தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் படம் வெளியானது. இன்னும் மூன்று நாட்களுக்கான படத்தின் டிக்கெட்டுகள் மொத்தமாக விற்றுத் தீர்ந்தது. இந்த நிலையில் ‘தி கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ‘தி கோட்’ படம் முதல் நாளில் ரூ.126.32 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளது. முதல் நாளில் இவ்வளவு பெரிய தொகையை விஜயின் படம் வசூலித்து தமிழ் சினிமாவில் சாதனை புரிந்துள்ளது.